தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம்

கேள்வி: தேசிய அரசின் இரண்டு பிரதான கட்சிகளினதும் பொருளாதாரக் கொள்கைகளில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறு பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபாடுகள் நிலவுகின்ற நிலையில் எவ்வாறு ஒன்றாக பயணிக்க முடிகிறது?

பதில்: இரு கட்சிகளுக்கிடையில் பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றபோதிலும், இரண்டு கட்சிகளும் கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு முன்னோக்கிப் பயணிக்கின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச்செல்லும் வகையில் மூலோபாயங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

கேள்வி: இரண்டு கட்சிகளுக்கிடையில் காணப்படும் பொருளாதார வேறுபாடுகளின் காரணமாகத்தான் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு...

பதில்: இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியில் இல்லை. கடன் நெருக்கடிகள் மாத்திரமே உள்ளன. அன்றைவிட இன்று பொருளாதாரம் வலுவாகவுள்ளது. கடன் சுமையை முகாமைத்துவம் செய்கின்றோம். பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளோம். 2017ஆம் ஆண்டுதான் வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் நாட்டை நோக்கி நகர்த்துள்ளன. பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் எமக்கிடையில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. ஆனால், பொருளாதார நெருக்கடியொன்றும் இல்லை. இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்யும்போது இவ்வாறு கருத்துவேறு
பாடுகள் நிலவுவது தவிர்க்க முடியாது.

கேள்வி: ரூபாவுக்கான பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதே...

பதில்: வெளிநாட்டுக் கையிருப்பு சில நாட்களில் அதிகரிக்கும். சில நாட்களில் குறைவடையும். இரண்டிலும்
சாதக, பாதகத் தன்மைகள் உள்ளன. வெளிநாட்டுக் கையிருப்பு குறைந்தால் ஏற்றுமதி அதிகரிக்கும். வெளிநாட்டுக் கையிருப்பு கூடினால் வாழ்க்கைச்
செலவு குறைவடையும் என்பதுடன், ஏற்றுமதியும் குறைவடையும்.
ரூபாவின் வீழ்ச்சிக்கு முக்கிய கார ணமாக அமைந்தது, நாங்கள் எதிர்பார்த்திராத வகையில் நாட்டின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்களாகும். வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சியால் உற்பத்தித்துறை சுற்றுவட்டம் முற்றாக மாற்றங்கண்டது. வருடத்தில் இரண்டு தடவைகள் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருந்தது. நெல், மரக்கறி, தென்னை உற்பத்திகள் பாரிய பாதிப்புக்குள்ளாகியிருந்தன. வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதியும் செய்யப்பட்டது.
தமிழ் சிங்கள புதுவருடத்திற்குள் இவற்றில் சாதகத்தன்மையை ஏற்படுத்த முடியும். தேங்காயை இறக்குமதிசெய்ய முடியாது. ஆனால், தேங்காய்க்கு பாரிய பற்றாக்குறை நிலவுகிறது. வாழ்க்கைச் செலவில் இந்தக் காலப்பகுதியில் பிரச்சினைகள் நிலவியதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். தேசிய வருமானம் வீட்டின் வரவுசெலவுக்கும் நாட்டின் வரவு செலவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இதிலிருந்து விடுபட்டுள்ளோம்.

கேள்வி: வெளிநாட்டு முதலீடுகள் மீள கொண்டுசெல்லப்படுவதாகக் கூறப்படும் கருத்துகளில் உண்மையுள்ளதா?

பதில்: இல்லை. முன்பைவிட அதிகளவான முதலீடுகள் நாட்டை நோக்கி வந்துள்ளன.

கேள்வி: பிணைமுறி விவகாரத்தால் முதலீடுகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறதே?

பதில்: இல்லை. பிணைமுறியால் எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில்தான் முதலீடுகள் குறைந்திருந்தன. முதலீடுகளின் அதிகரிப்பால் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடன் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

கேள்வி: நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல உங்களிடமுள்ள விசேட திட்டங்கள் என்ன?

பதில்: கடன் சுமையிலிருந்து முதலில் விடுபடவேண்டும். தற்போது கடன்சுமை ஸ்திரமாக்கப்பட்டுள்ளது. கடன்களைச் செலுத்த எமது பொருளாதாரம் பாரிய வளர்ச்சியை அடையவேண்டியுள்ளது. 2025ஆம் ஆண்டாகும்போது கடன் செலுத்துவது இலகுவாகும். 2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில்தான் அதிகளவு கடன்களைச் செலுத்தவேண்டியுள்ளது. கடனைச் செலுத்தும் அதேவேளை, வருமானத்தை அதிகரித்து நாட்டை அபிவிருத்திப்பாதைக்கும் இட்டுச்செல்ல வேண்டும். 

கேள்வி: தேர்தல் முறைமையின் கீழ் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றீர்கள். இந்த அனுபவம் எவ்வாறுள்ளது?

பதில்: அனைத்துக் கட்சிகளும் இந்தத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. பெறுபேறுகள் கிடைத்தால்தான் தேர்தல்முறைமையின் சாதக பாதகங்கள் விளங்கும். குறைபாடுகள் ஏற்பட்டால் அவை மறுசீரமைக்கப்படும். ஸ்திரமான கிராம ஆட்சியொன்றைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கேள்வி: 2015ஆம் ஆண்டு நீங்கள் நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டபோது நாடு காணப்பட்ட நிலைக்கும், இன்று காணப்படும் நிலைக்குமிடையிலான வேறுபாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: இன்று சுதந்திரமான சமூகமொன்றுள்ளது. வெளிப்படைத்தன்மையுள்ளது. அனைவராலும் சுதந்திரமாக கருத்துகளை முன்வைக்கமுடியும். அரசின் செயற்பாடுகள் முதல் தகவல் அறியும் உரிமைவரை கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தின் சுயாதீனம் நிலைநாட்டப்பட்டுள்ளது. தேசிய சகவாழ்வு சக்திமயமடைந்துள்ளது. அரசியல் தீர்வுக்கு நாங்கள் இன்னமும் வரவில்லையாயினும், தேசிய சகவாழ்வு வலுவடைந்துள்ளது; பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது; சர்வதேச உறவுகளும் வலுவடைந்துள்ளன.

கேள்வி: 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவீர்கள் என்ற அச்சத்தின் காரணமாகவா நீங்கள் போட்டியிடவில்லை?

பதில்: தமிழ்க் கூட்டமைப்பு, ஜே.வி.பி., சிவில் அமைப்புகள் அனைத்தும் மஹிந்தவை தோற்கடிக்க ஒன்றிணைந்தன. அதனால், வெளியிலிருந்து பொது வேட்பாளரொருவரை களமிறக்கவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால கருத்துகள் அனைத்தும் ஊழலற்ற தூய்மையான அரசொன்றை அமைக்கவேண்டும். அதில் ஊழலுக்கு எதிரானவர்கள் பங்கேற்கவேண்டும் என்பதாகும். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி
மீதும் கடும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றாரே?

பதில்: அனைவரும் தூய்மையான அரசொன்றை அமைக்கவே முயற்சிக்கின்றோம். தேர்தல் காலம் என்பதால் பிரதான இரண்டு கட்சிகளுக்கிடையில் விமர்சனங்கள் இருக்கும். உலகெங்கும் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டாலும் தமது தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ள தேர்தலுக்குத் தனித்தே செல்கின்றன. அந்தக் காலப்பகுதியில் விமர்சனங்கள் அதிகரிக்கும்.

கேள்வி: தேர்தலின் காரணமாகத்தான் ஜனாதிபதி ஐ.தே.க. மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றாரா?

பதில்: தேர்தலை பார்த்துத்தான் அனைவரும் பேசுகின்றனர்.

கேள்வி: ஊழல்வாதிகளைத் தண்டிக்க உங்களிடம் ஜனாதிபதி அனுமதி கோருகின்றார். ஏன் நீங்கள் அனுமதியளிப்பதில்லையா?

பதில்: நாங்கள் எந்த நேரமும் அவருக்கு ஆதரவளிக்கின்றோம்.

கேள்வி: தேசிய அரசின் பயணம் தேர்தலின் பின்னர் எவ்வாறு அமையும்?

பதில்: தற்போது போன்றே தேசிய அரசை 2020ஆம் ஆண்டுவரை கொண்டுசெல்வோம். உடன்படிக்கை எங்களுக்குள் உள்ள பிரச்சினையாகும். கட்டாயம் 2020வரை தேசிய அரசு பயணிக்கும். சட்டரீதியான பாதிப்புகள் எதுவும் இல்லை.

கேள்வி: தேசிய அரசு மீது சுமத்தப்பட்ட முதலாவது குற்றச்சாட்டுத்தான் பிணைமுறி விவகாரம். உண்மையில் என்ன நடந்துள்ளது?

பதில்: குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது முதலே விவாதிக்க ஆரம்பித்தோம். இலங்கையில் எந்த அரசு தமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தபோது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது? இதுதான் புதிய அரசியல் கலாசாரம்.

கேள்வி: பிணைமுறி விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்: இழப்பொன்று ஏற்பட்டுள்ளது. பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனத்தின் கணக்கில் நிதிகள் அனைத்தும் உள்ளன. அதனைப் பெற்றுக்கொள்ளும் விதிமுறைகளையும் ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் முன் மொழிந்துள்ளது. குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் மூன்றுமுறை விவாதித்துள்ளோம்.

கேள்வி: பிணைமுறி விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை ஐ.தே.கவின் உப தலைவர் பதவியிலிருந்து விலக்குமாறு நீங்கள் நியமித்துள்ள அமைச்சர் மாரப்பன தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: அவ்வாறொன்றும் இல்லை. அதன் சாரம்சத்தை நாங்கள் வெளியிடுவோம்.

கேள்வி: பிணைமுறி மோசடிக்கு தண்டனை வழங்கும் செயற்பாடு எவ்வாறமையும்?

பதில்: புதிய சட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. புதிய மேல் நீதிமன்றமொன்றை நிறுவ அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. மூன்று நீதியரசர்கள் உள்ள மேல் நீதிமன்றமே இவ்வாறு உருவாக்கப்படவுள்ளது. வழக்குகள் அனைத்தும் தினம்தினம் விசாரிக்கப்படும். இந்த வழக்குகள் நேரடியாக உயர் நீதிமன்றத்துக்குச் செல்லும். குறுகிய காலத்தில் இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்கவே இதுபோன்று மூன்று நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கேள்வி: பிணைமுறி விவகாரத்தால் ஐ.தே.க. முகம்கொடுக்கும் சவால்களால் தேர்தலில் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதா?

பதில்: ஊடகங்கள்தான் இதனை அதிகமாக எடுத்துக்கொள்கின்றன. 

கேள்வி: அர்ஜுன மகேந்திரன், அலோஸியஸ் போன்றோருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

பதில்: சட்டமா அதிபருக்கு விடயங்கள் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. அவர் இதனைப் பார்த்துக்கொள்வார்.

கேள்வி: தேசிய பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

பதில்: தேசிய சகவாழ்வு வலுவடைந்துள்ளது. அரசியல் தீர்வுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணையவேண்டும். எங்களுடைய நிலைப்பாட்டில் எல்லோரும் இல்லை. அவர்களும் எமது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். இரண்டு தரப்பும் ஒன்றிணைந்து புதிய நிலைப்பாடுகளுக்குப் போகலாம். இவைதான் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றன. ஒரே தடவையில் தீர்வு கிடைக்காது.

கேள்வி: சமகாலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளுக்கமைய புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவர முடியுமொன்ற நம்பிக்கையுள்ளதா?

பதில்: நாங்கள் முயற்சிக்கின்றோம். பார்ப்போம் யார் எதிர்க்கின்றார்கள் என்று. அப்போது மக்களுக்குத் தெரியும் யார் இதனை எதிர்க்கின்றனர் என்று.

கேள்வி: தேசிய அரசின் முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மக்களிடம் கடும் அழுத்தத்துக்குள்ளாகி வருகிறாரே?

பதில்: அவருக்கும் பிரச்சினையுள்ளது. எமக்கும் பிரச்சினையுள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டுதான் இந்தப் பயணத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லவேண்டியுள்ளது. நாங்கள் ஒன்றிணைந்தாலும் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லை.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து சமஷ்டி அரசியலமைப்பையே கோரிவருவதுடன், தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டிமுறையிலான ஆட்சியே அவசியம் என வலியுறுத்தியுள்ளது. சமஷ்டி சாத்தியமா?

பதில்: அவர்கள் சமஷ்டிக்கு சமமான முறைமையொன்றையே வலியுறுத்துகின்றனர். நாங்கள் கூறுகின்றோம் ஒற்றையாட்சி கோட்பாட்டுக்கு பாதகம் ஏற்படாத வகையிலான தீர்வையே. இதில் பொதுவான காரணிகள் பல உள்ளன. எங்களுடைய நிலைப்பாடு ஒற்றையாட்சி கட்டமைப்பில் தீர்வு காண்பதாகும். ஒற்றையாட்சிக்குப் பாதகம் ஏற்படாத வகையில் அதிகாரப்பகிர்வை மேற்கொண்டால் பிரச்சினையில்லாது தேசியக் கொள்கைகளை வகுத்து வேலைகளைச் செய்யமுடியும். தேர்தலின் பின்னர் இது தொடர்பில் மீண்டும் பேச்சுகள் ஆரம்பிக்கப்படும்.

கேள்வி: புதிய அரசியலமைப்பு தொடர்பில் சிங்கள மக்களுக்குத் தெளிவாக விளக்கமளிக்க வேண்டுமென கூட்டமைப்பு தெரிவித்துள்ளதே...

பதில்: சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல, முழு நாட்டுக்கும் இதன் புரிதலை விளக்கமளிக்க வேண்டும்.

கேள்வி: தமிழ் மக்கள் இந்த நாட்டில் தமக்கு சுதந்திரமில்லை என்று தொடர்ந்து நினைக்கின்றனர். அதன் நிமித்தமாவது தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாணும் செயற்பாட்டை துரிதப்படுத்தினால் என்ன?

பதில்: இன்று நாட்டில் சுதந்திரம் உள்ளது. வேண்டியதைச் செய்யமுடியும். யாழ்ப்பாணத்திலிருந்து தேவேந்திரமுனைவரை சுதந்திரமுள்ளது. ஜனநாயக சுதந்திரம் உள்ளது. நாட்டின் அனைத்து இடங்களிலும் ஜனநாயகமுள்ளது. தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைவருக்கும் சுதந்திரமுள்ளது. அந்தச் சுதந்திரம் உள்ளபோதிலும் அரசியல் தீர்வுக்கு நாங்கள் இன்னமும் வரவில்லை. சாமானிய பிரஜைகளின் உரிமை நாட்டிலுள்ளது.

கேள்வி: வடக்கு மக்கள் தொடர்ந்து இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறும், அரசியல் கைதிகளின் விவகாரத்துக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறும் வலியுறுத்திவருகின்றனர். ஆனால், இந்த விடயத்தில் அரசு அசமந்தப்போக்கில் செயற்படுகிறதாக சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்...

பதில்: இன்று அரசியல் சிறைக்கைதிகள் எவரும் இல்லை. வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளவர்கள் மாத்திரமே உள்ளனர். காணி விடுவிப்பு குறிப்பிட்டளவு நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில்தான் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் காணிகளை எவ்வாறு விடுவிப்பதென ஆராயப்படுகிறது. ஆனால், தற்போதுவரை அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கேள்வி: காணாமல்போனோர் பணியகத்தை அமைப்பதில் ஏன் தாமதம் நிலவுகிறது?

பதில்: காணாமல்போனோர் காரியாலயத்தை அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டதும் அவர்கள் தமது செயற்பாடுகளை கொண்டுசெல்ல முடியும்.

கேள்வி: இன்னமும் 140இற்கும் அதிகமானவர்கள் காரணமின்றி அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனரே...

பதில்: குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த அதிகளவானர்கள் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளவர்கள் அரசியல் கைதிகள் அல்ல. நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள். அவர்களை அரசியல் கைதிகள் என்பதை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுத்தான் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி: வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன?

பதில்: மத்திய அரசில் சில அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சில அபிவிருத்தித் திட்டங்களை மாகாண சபை முன்னெடுத்துள்ளது. வடக்கு என்பது பொருளாதாரத்தில் முற்றிலும் அழிந்துபோன இடமாகும். யுத்தத்தால் பொருளாதாரம் சீரழிந்துபோயுள்ளது. புதிதாக கட்டியெழுப்பவேண்டும். கிழக்கில் பிரச்சினையில்லை. சமூகக் கட்டமைப்பும் இல்லாது போயிருந்தது. அதிகமானோர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
கிழக்கு போலல்லாது வடக்கில். சமூகமும் முற்றும் வீழ்ச்சிகண்டுள்ளது. பொருளாதாரம் அழிந்துபோயிருந்தது. பொருளாதாரத்தின் ஆரம்ப வேலைத்திட்டங்களை இன்று எம்மால் ஆரம்பிக்க முடிந்துள்ளது. அன்று சமூகத்திற்கு தலைமைதாங்கியவர்கள் இன்று இலங்கையில் இல்லை.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் மேடைகளில் அன்றுமுதல் இன்றுவரை தெரிவிக்கும் பிரதான விடயம்தான் வடக்கு கிழக்கு இணைப்பு. இது சாத்தியமாகுமா?

பதில்: அதனைச் செய்ய கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக இல்லையே. வடக்கில் பெரும்பான்மையா என்று எனக்குத் தெரியாது. கிழக்கில் பெரும்பான்மையில்லை. பலவந்தமாக இணைக்கமுடியாது.

கேள்வி: முஸ்லிம் மக்கள் இணங்கினால் இணைக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா?

பதில்: அதனைப் பார்க்கலாம். தற்போது பெரும்பான்மையில்லை.

கேள்வி: ஜெருசலேம் விவகாரத்தில் இலங்கை எடுத்த தீர்மானத்தால் எதிர்வரும் மார்ச் மாத அமர்வு இலங்கைக்கு பாதிப்பாக அமையுமா?

பதில்: இல்லை. எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அமெரிக்காவின் பல உறவு நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக்க எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. ஐரோப்பிய நாடுகளும் எதிர்த்திருந்தன.

கேள்வி: சர்வதேச உறவுப்பாலத்தை மீண்டும் என்னால் மாத்திரமே வெற்றிகொள்ள முடிந்துள்ளதென ஜனாதிபதி உரிமை கொண்டாடுகிறாரே...

பதில்: தேர்தல் காலம் என்பதால் எதனையும் சொல்லலாம்.

கேள்வி: பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை வாக்குறுதியளித்திருந்த போதிலும், இன்னமும் நீக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றன. இதனை நீக்குவதற்காக நடவடிக்கை எப்போது எடுக்கப்படும்?

பதில்: நாங்கள் புதிய சட்டத்தை தற்போது உருவாக்கிவருகின்றோம். தற்போது இலங்கைப் பிரஜைகள் எவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கவில்லை. இதனை நீக்கினால் சர்வதேச தீவிரவாதிகளை எவ்வாறு தடுத்துவைக்க முடியும்? சர்வதேச நாடுகளும் புதிய சட்டத்தைக் கொண்டுவருமாறு வலியுறுத்துகின்றன. என்றாலும், புதிய சட்டம் கொண்டுவரப்படும் வரை இதனை வைத்துக்கொள்ளவேண்டும். அது எவ்வளவு கெட்டதாக இருந்தாலும் புதிய சட்டம் தயாரித்து நடைமுறைக்கு வரும்வரை வைத்துக்கொள்ளவேண்டும். இணையதளங்களைப் பார்த்தும் தீவிரவாதிகளாக மாறுகின்றனர். அமெரிக்காவின் சட்டத்துக்கும் இங்கிலாந்தின் சட்டத்துக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. சர்வதேச தரநிர்ணயமொன்று பயங்கரவாத சட்டங்களுக்கு இல்லை. புதிய சட்டத்தைத் தயாரித்து வருகின்றோம்.

கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜாவுரிமையை நீக்கவேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதே...

பதில்: ஆணைக்குழு அவரின் பிரஜாவுரிமையை நீக்குமாறு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. இது குறித்து அரசு பேச்சுகளை இதுவரை முன்னெடுக்கவில்லை.

கேள்வி: விடுதலைப்புலிகளின் தடையை நீக்குமாறு வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நாட்டில் சாதாரண சூழல் நிலவுவதால் தடையை நீக்கமுடியுமா?

பதில்: தமிழ்த் தலைமைகளை முற்றாக ஒழித்துக்கட்டியது தமிழீழ விடுதலைப்புலிகள்தான். தெற்கோடு மட்டும் புலிகள் போராடியிருக்கவில்லை, யாழ்ப்பாணத்துக்கு எதிராகவும் போராடியிருந்தனர். நல்லிணக்கத்துக்காக எவ்வாறு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கமுடியும். அவ்வாறு செய்யமுடியாது. தமிழ்த் தலைமைகளை முற்றாக ஒழித்துக்கட்டியது புலிகள் அமைப்புத்தான். இராணுவம் இல்லை. புலிகள் முற்றாக அழிந்துள்ளனர். புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டிருப்பதில் எவ்விதப் பிரச்சினையும் எமக்கில்லை. அரசியல் தீர்வுக்குச் செல்வோம் என்றே தற்போதையை தமிழ்த் தலைமைகள் எம்மிடம் கூறியுள்ளனர்.

கேள்வி: ஐ.தே.க. மீது ஜனாதிபதி உள்ளிட்ட சு.கவினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றமை தொடர்பில்...

பதில்: தேர்தல் காலம் என்பதால் தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ள பேசுகின்றனர். தேர்தலின் பின்னர்தான் ஒன்றாகச் செயற்படுவோம். அதற்காக மோதவேண்டியதில்லை.

கேள்வி: பெருந்தோட்ட மக்களுக்கு முன்னெடுக்கும் வீடமைப்புத் திட்டங்களும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களும் போதாமல் உள்ளன. இவர்களுக்கு விசேட திட்டங்கள் ஏதும் உள்ளனவா?

பதில்: இன்னும் 15 ஆயிரம் வீடுகள்வரை அமைக்கப்படவுள்ளன. கல்வி இராஜாங்க அமைச்சர், அமைச்சர் திகாம்பரம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து இங்கு கல்வி சுகாதார அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. தோட்டப்புறத்தில் தமிழ் மாத்திரமல்ல, சிங்களப் பிரதேசங்களிலும் சுகாதார வசதிகள் குறைவாகத்தான் உள்ளன. வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படும்.

கேள்வி: ஊவா மாகாண முதலமைச்சரின் செயற்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

பதில்: எமது முதலமைச்சரொருவர் இவ்வாறு செயற்பட்டிருந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பேன். சு.க. பற்றி என்னால் கூறமுடியாது.

கேள்வி: மலையக இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புகளுக்காக கொழும்பை நோக்கியே வரவேண்டியுள்ளது. அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அங்கு பெற்றுக்கொள்ளும் முறையொன்றை உருவாக்கமுடியாதா?

பதில்: மலையகப் பகுதிகளில் சுற்றுலாத்துறையை அபிவிருத்திசெய்ய எதிர்பார்க்கின்றோம். தொழிற்பேட்டைகளைவிட சுற்றுலாத்துறை அங்கு சிறப்பானதாக அமையும். முற்றுமுழுதாக இது தோட்டப்புற பொருளாதாரமாகும். இது தேசிய பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்றது. தோட்டப்புற பொருளாதாரத்தை மறுசீரமைப்புக்கு உள்ளாக்கவேண்டியுள்ளது.

கேள்வி: பலாலி விமானநிலையம் மீளுருவாக்கம் செய்யப்படுமா?

பதில்: பலாலி விமானநிலையம் சர்வதேச தரத்திற்கமைய மறுசீரமைக்கப்பட்டால் சுற்றியுள்ள மக்களின் காணிகளைக் கைப்பற்றவேண்டிய நிலை ஏற்படும். அந்த மக்கள் காணிகளை தியாகம் செய்யத் தயாரில்லை. அதனை தேசிய மட்டத்தில் பயன்படுத்த அபிவிருத்திசெய்யவேண்டும்.

கேள்வி: "எட்கா' உடன்படிக்கையை கைச்சாத்திடுவதில் ஏன் இவ்வளவு தாமதம்? இவ்வருடத்திலாவது குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமா?

பதில்: "எட்கா' உடன்படிக்கையை கைச்சாத்திடுவதில் அவர்களின் பிரச்சினை, எமது பிரச்சினையென கலந்துரையாடவேண்டியுள்ளது. இந்த வருடத்தில் கைச்சாத்திடத்தான் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளுக்கு தண்டனை வழங்கும் செயற்பாடு தொடர்ந்து தாமதமடைந்துவருகிறது. இதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?

பதில்: நீதிமன்ற நடவடிக்கைகளிலும் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்காகத்தான் புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. கூடிய விரைவில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டங்கள் அமையும். சட்டமா அதிபராலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவாலும் நேரடியாக மேல் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு வழக்குகள் தாக்கல்செய்யப்படும். தினம்தினம் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று தண்டனை வழங்கப்படும். 

கேள்வி: தேர்தல் பெறுபேறுகள் எவ்வாறு அமையும்?

பதில்: நாங்கள்தான் அதிகளவான வாக்குகளைப் பெற்றுக்கொள்வோம். புதிய முறை என்பதால் எந்தளவான வாக்குவீதத்தைப் பெற்றுக்கொள்வோமெனக் கூறமுடியாது.

கேள்வி: இறுதியாக மக்களுக்கு எதனைக் கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: அனைவரும் ஒன்றிணைந்து வேலைசெய்வோம். கிராம அரசை சக்திவாய்ந்ததாக அமைத்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

சு. நிஷாந்தன்

 

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top