முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மாற்றங்கள் தேவை

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மாற்றங்கள் தேவை

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் செழிப்பான இஸ்லாமிய சட்டவியல் விடயங்கள் உள்வாங்கப்படவில்லை. இஸ்லாத்தில் பெண்களுக்காக சொல்லப்பட்ட சட்டங்கள் எதுவும் இதில் உள்ளடங்கவில்லை. இந்த சட்டத்தில் உள்ள பாரபட்சமான ஏற்பாடுகள் நடைமுறையில் முஸ்லிம் பெண்கள் மீதும் சிறுமிகள் மீதும் ஏற்படுத்தும் பாரிய தாக்கங்களை உணர்ந்து காலத்தின் தேவைக்கு ஏற்ப இந்த சட்டத்தினை முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து திருத்தம் செய்ய முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலரும், சட்டத்தரணியும், சட்ட முதுமாணியுமான ஹஸ்னாஹ் சேகு இஸ்ஸதீன் வேண்டுகோள் விடுத்தார். 

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பிலும் அது முஸ்லிம் பெண்கள் மீதும் சிறுமியர்கள் மீதும் செலுத்தும் தாக்கம் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த போதே ஹஸ்னாஹ் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். இந்த சட்டம் முஸ்லிம் சமூகத்தில் செலுத்தும் தாக்கம் குறித்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு ""இலங்கையில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான முஸ்லிம் பெண்களின் போராட்டம்'' என்ற தலைப்பில் ஹஸ்னாஹவும், ஹிஸாமா ஹாமினும் இணைந்து ஆய்வறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபாரிசு அறிக்கை தற்போது நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சட்டம் பற்றியும், சட்டத் திருத்தத்திற்கான தேவைப்பாடுகள் பற்றியும் "சுடர் ஒளி'க்கு அவர் விளக்கமளித்தார். நேர்காணலாக அமைந்த அந்த விளக்கமளிப்புகள் பின்வருமாறு அமைந்திருந்தது.

கேள்வி: முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டம் என்றால் என்ன?

பதில்: இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு என்று தனியான விவாகம், விவாகரத்து சம்பந்தமான சட்டம் அமுலில் உள்ளன. இந்த சட்டம் 1951ஆம் ஆண்டு பாராளுமன்றத்தினால் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் என்ற பெயரில் சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டம் 1770ஆம் ஆண்டு ஒல்லாந்தர் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்தோனேசியாவில் இருந்த மார்க்க அறிஞர்கள் அங்கு பின்பற்றிய முஸ்லிம் சட்டத்தினையே ஒல்லாந்தர் இங்கு கொண்டு வந்து இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கும் அதனை அறிமுகப்படுத்தினர்.

கேள்வி: இந்த சட்டத்தில் ஏன் திருத்தம் தேவை என்று வலியுறுத்தப்படுகின்றது?

பதில்: இந்த சட்டத்தினை எடுத்து நோக்கினால் இந்த சட்டம் முஸ்லிம் சட்டம் என்றதனால் இது ஒரு ஷரிஆ சட்டம் என்ற ஒரு மாயை காணப்படுகின்றது. இது முக்கியமானதொரு விடயம். அதாவது அல்லாஹ்வினால் இயற்றப்பட்ட சட்டம் தான் இந்த சட்டம். ஆகவே, இந்த சட்டத்தில் மாற்றம் செய்யக் கூடாது என்பது ஒரு பிரச்சினையாக இருக்கின்றது.  இலங்கையில் முஸ்லிம்கள் நடைமுறையில் பின்பற்றுகின்ற சில வழக்காறுகள் உதாரணமாக சீதனம் வழங்கும் பழக்கங்களான சீதனம் எவ்வாறு கொடுக்கலாம்? எதை சீதனமாக கொடுக்கலாம்? அது அசையும் சொத்தா, அசையாச் சொத்தா? அதனை பதிவு செய்வதா? பதிவு செய்யாமல் விடலாமா? ஆகியன தொடர்பான பிரச்சினைகளை எந்த
நீதிமன்றத்தில் வழக்கிடுவது? அதற்கு எதிராக அதனை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் எப்படி? ஆகிய விடயங்கள் எல்லாம் இந்த சட்டத்தில் இருக்கின்றன. முஸ்லிமாக இருக்கின்ற எவருக்கும் தெரியும் சீதனம் என்பது இஸ்லாத்தில் முற்றிலும் ஹராமான ஒரு விடயமாக இருக்கின்றது. அதாவது முற்றாக தடை செய்யப்பட்ட விடயமாக உள்ளது. அவ்வாறான விடயம் இந்த முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாயின் இது முற்றிலுமே அல்லாஹ்வினால் சொல்லப்பட்ட சட்டம் இல்லை என்பதனை உணரக் கூடியதாக இருக்கும். இது பற்றிய தெளிவு எங்களுக்கு வேண்டும். ஆனால், இந்த சட்டத்தில் என்ன இருக்கின்றது என்பதனை பற்றி தெரியாத ஒரு நிலையில் தான் இந்த சட்டத்தில் கை வைப்பதனால் முஸ்லிம்களின் உரிமைகளில் பாதிப்பு வந்து விடும் என்றும் அதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்றும், உடனடியாக எதிர்ப்புத் தெரிவிக்கின்ற ஒரு மனநிலை முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ளது. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் பாராளுமன்றத்தினால் 51ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சட்டம். இத்தனை கால இடைவெளிகளில் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்ற நிலையில் அதற்கு ஏற்ற வகையில் பாராளுமன்றத்தில் இயற்றப்படுகின்ற சட்டங்கள் திருத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. ஏனெனில் அது காலத்தின் தேவை. இந்த சட்டத்தினைப் பொறுத்த வரையில் இதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. இதனை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே நீண்ட காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

கேள்வி: முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத் திருத்த சிபாரிசு அறிக்கையை வெளியிடுமாறு அண்மையில் கொழும்பில் அமைதிப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இதன் மூலம் முஸ்லிம் பெண்கள் வலியுறுத்துவது
என்ன?

பதில்: உதாரணமாக பார்த்தோமானால் இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் குழுக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினர் மற்றும் முஸ்லிம் சட்டத்தின் கீழ் வாழும் பெண்கள் ஆகிய அமைப்பினர் பின்புலத்தில் இருந்து இந்த சட்டத் திருத்தம் தொடர்பில் பெரும் பணியாற்றி வந்தனர். இந்த சட்டத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன. இந்த சட்டத்தினை திருத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக கூறப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஆனால், இன்னும் அது மாற்றப்படவில்லை. இதுவரையிலும் 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கடைசியாக அமைக்கப்பட்ட குழு தான் 2009ஆம் ஆண்டு முன்னாள் நீதி அமைச்சர் மிலிந்த மொறகொடவினால் நியமிக்கப்பட்ட குழு. இந்தக் குழு கூட 9 ஆண்டுகளாக அதாவது நீண்ட காலமாக பரிந்துரைகளை முன்வைக்கும் தயார் நிலைகளை ஏற்படுத்திக் கொண்டு வந்தது.
ஆனால், இந்த 9 வருட காலத்தில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக எத்தனையோ அநியாயங்கள் நடந்துள்ளன. அதனால் எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்ற அடிப்படையில் இனியும் தாமதம் செய்யாமல் இந்த அறிக்கையை தயவு செய்து வெளியிடுங்கள் என்ற கோரிக்கையினை முன்வைத்துத்தான் இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தினை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.
கடந்த 2 வருடங்களாக இந்த சிபாரிசு அறிக்கையினை ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஒவ்வொரு திகதி குறிக்கப்பட்டு அன்றைய தினம் வெளியிடுகின்றோம் மற்றைய திகதியில் வெளியிடுகின்றோம் என்று தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்தது. அப்படி இனியும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் ஏதாவது ஒரு திகதியை நிர்ணயித்து அந்த அறிக்கையை வெளியிட நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அமைதியான ஆர்ப்பாட்டத்தினை செய்தோம். நல்லபடியாக அந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. நிறைய உறுப்பினர்களின் கடினமான உழைப்பின் பேரில் ஏதோ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தகது.

கேள்வி: முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தினால் முஸ்லிம் பெண்களும், சிறுமிகளும் பாரபட்சத்திற்கும், அநீதிக்கும் உள்ளாகின்றனர் என்று எப்படி கூறுகின்றீர்கள்?

பதில்: நீண்ட காலமாக முஸ்லிம் பெண்களும் சிறுமிகளும் இந்த முஸ்லிம் தனியார் சட்டத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். அது என்ன என்ன விதத்தில் என்பது நீண்ட காலமாக இந்த சட்டத்தினைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும்.
திருமண வயதெல்லையை முதலாவதாக எடுத்துக் கொள்வோம். இலங்கையைப் பொறுத்தவரையில் ஆணாயினும், பெண்ணாயினும் பொதுச்சட்டத்தின் கீழ் 18 வயதாக திருமண வயதெல்லை இருக்கின்றது. ஆனால், முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை அவ்வகையான ஒரு திருமண வயதெல்லை என்ற எல்லையே இல்லை. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது
12 வயதுக்கு குறைந்த சிறுமிகளின் திருமணமானது காதியினால் விசாரிக்கப்பட்டு, அதிகாரமளிக்கப்படுமிடத்து மட்டுமே அத்திருமணத்தினை பதிவு செய்ய முடியும் என்ற வரையறையைக் கொண்டுள்ள போதிலும், பதிவு செய்யப்படாமல் சடங்கு ரீதியாக செய்யப்படும் திருமணங்களும் வலிதானவையே என்ற ஏற்பாட்டையும் கொண்டுள்ளது.
ஆனால், எங்கள் ஆய்வில் சில இடங்களில் வயதினைக் கூட்டியும் பதிந்துள்ளார்கள். 14 வயது பெண்ணுடன் நாங்கள் பேசியிருக்கின்றோம். திருமணமாகி விவாகரத்தும் நடந்து இருக்கின்றது. ஆனால், அவருடைய திருமண சான்றிதழில்
16 வயது என்று பதிவாகியுள்ளது. ஏனெனில் திருமண சான்றிதழ் படிவத்தில் பிறந்த நாள், ஆண்டு, மாதம் என்ற விடயம் உள்ளடக்கப்படவில்லை. வயது என்ற விடயம் மட்டுமே படிவத்தில் உள்ளது. அதில் எத்தனை இலக்கத்தினை வேண்டுமானாலும் இட முடியும். 14 வயதினை
18 என்று நிரப்பிவிடும் சம்பவங்கள் எத்தனையோ நடைபெற்றுள்ளன. இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ள எத்தனையோ பெண்களை நாங்கள் சந்தித்திருக்கின்றோம். சிறுமிகளாக இருப்பார்கள். ஆனால், கையில் குழந்தையுடன் இருப்பார்கள். ஆனால், திருமணப் பதிவில்
17 அல்லது 18 என்று இருக்கும்.
இவ்வாறு நடப்பது முஸ்லிம் சமூகத்தில் மட்டும் தானா? மற்றைய சமூகங்களில் இல்லையா என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. நிச்சயமாக நடைபெறுகின்றது. அதனை யாரும் மறுக்கவில்லை. மற்றைய சமூகங்களில் நடக்கின்றது என்பதற்காக முஸ்லிம் சமூகத்தில் நடப்பதனை நாங்கள் நியாயப்படுத்தவும் முடியாது. எந்த சமூகத்தில் நடந்தாலும், சிறுவர்களைப் பொறுத்தவரை அது அவர்களின் உரிமை மீறல் என்றே கருத முடியும்.
மேலும் 14 வயதில் திருமணத்திற்கு விருப்பமா என்று சிறுமியிடம் கேட்டால், அவள் அலங்காரத்திற்கு பிரியப்பட்டு சரி என்று தலையாட்டினாலும் அவர்களுக்கு குடும்ப வாழ்க்கை என்பது என்ன என்று தெரியாது. இஸ்லாம் கூறுகின்ற குடும்ப அமைப்பு என்பது கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து கட்டியெழுப்புகின்ற ஒரு அழகான குடும்ப அமைப்பு பற்றித்தான் கூறுகின்றது. இஸ்லாம் கூறுகின்ற குடும்ப அமைப்பினைக் கட்டியெழுப்புவதற்கு 14 வயது பிள்ளைக்கு பக்குவம் இருக்குமா?

கேள்வி: விவாகரத்திற்கான சமத்துவமற்ற ஏற்பாடுகளும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் மேலோங்கியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் குறிப்பிடுகின்றனர். இது உண்மையா?

பதில்: முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் ஆணுக்கும் பெண்ணுக்கும் விவாகரத்தின் வகைகள், நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. பெண் பிள்ளைகளைப் பாதுகாப்பு கருதி திருமணம் செய்து கொடுக்கின்றனர். திருமணம் முடித்த ஒரு மாதத்தில் விவாகரத்து நடைபெறுகின்றது. அது பற்றி யாரும் பேசுவதில்லை. நினைத்தவுடன் விவாகரத்து செய்து விட்டு போகக் கூடிய உரிமையும் கணவனுக்கு இந்த சட்டத்தில் கிடைக்கின்றது. ஆகக் கூடியது 3 மாதங்கள் தான். உச்ச நீதிமன்றம் தடுத்தால் கூட விவாகரத்தினை நிறுத்த முடியாது.
தலாக் (நான் உன்னை விவாகரத்து செய்கின்றேன்.) என்று சொல்லும் போது மனைவியின் பிரசன்னம் இருக்க வேண்டும் என்று தேவைப்படுத்தப்படுவதில்லை. மேலும், பல பெண்கள் காதி அறிவிக்கும் வரை அவர்களது கணவன்மார் அவர்களை விவாகரத்து செய்ய விருப்பதினை அறியாதவர்களாக இருந்த பல சந்தர்ப்பங்களை பெண்கள் குழுக்கள் அறிக்கையிட்டுள்ளன.
கணவன் விவாகரத்து செய்து விட்டு போகும் பொழுது இந்த முஸ்லிம் மணப்பெண்ணுக்கு எந்தவொரு நட்டஈடும் இல்லை. 3 மாதம் அவளைப் பராமரிப்பதற்கு காசு கொடுப்பதே தவிர, மற்றப்படி அவ்வளவு காலமும் வாழ்ந்ததற்கான நட்டஈடோ அல்லது மாதா மாதம் வழங்கப்படும் ஜீவனாம்சம் என்ற கொடுப்பனவோ எதுவுமே இல்லை. இது முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணானது. இஸ்லாத்தில் புனித குர்ஆனில் விவாகரத்து செய்யும் போது மொத்தமாக ஒரு தொகையை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு பொற்குவியல் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து ஒரு நாணயக் குற்றியினைக் கூட திருப்பி எடுத்து விடாதீர்கள். அன்று புனித அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அது தான் இஸ்லாம். ஆனால், அந்த இஸ்லாம் கூறும் நெறிமுறைகள் இந்த முஸ்லிம் தனியார் சட்டத்தில் இல்லை. இதைப் பற்றி யாரும் கதைப்பதில்லை. ஆனால், முஸ்லிம்கள் இந்த சட்டத்தினை ஷரிஆ என்றும் அல்லாஹ்வின் சட்டம். அது பூரணமாக இருக்கின்றது. ஆகவே, அதில் கை வைக்காதே என்று சொல்லப்படுகின்றது. முஸ்லிம் பெண்ணுக்கான இஸ்லாத்தில் சொல்லப்பட்ட பாதுகாப்பு இதில் உள்ளதா என்பதே எங்கள் கேள்வி.

கேள்வி: பலதார மணம் பற்றியும் பல குளறுபடிகள் இந்த சட்டத்தில் உள்ளதாக பெண்கள் குழுக்கள் வலியுறுத்துகின்றன. இதில் பாதிக்கப்படும் பெண்களுக்கென ஏதும் சிறப்பு ஏற்பாடுகள் இல்லையா?

பதில்: பலதார மணத்திற்கு அனுமதி இருக்கின்றது என்று கூறப்படுகின்றது. குர் ஆனில் வரும் வசனத்தினை எடுத்துப் பார்த்தால் யாரால் சமனாகவும் நீதியாகவும் நடத்த முடியுமோ, அவர்கள் பலதார மணம் செய்ய முடியும் என்று
சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனாலும், ஒரு மனைவியுடன் இருப்பது உங்களுக்கு நன்மை பயக்கும் என்றும் குர்ஆன் வசனம் வருகின்றது. அது பற்றி எவருமே பேசுவதில்லை. பலதார திருமணத்தினைப் பற்றி பேசுவோம். அதற்கு அனுமதி இருக்கின்றது என்று எடுத்துக் கொள்வோம். அதில் நிபந்தனை ஒன்று இருக்கின்றதா? யாருக்கு அவ்வாறு திருமணம் முடிக்க முடியும். எல்லோராலும் திருமணம் முடிக்க முடியுமா? சமனாக நீதியாக யார் நடத்த முடியுமோ அவர்கள் தான் அதற்கு தகுதி வாய்ந்தவர்கள். முதலாவது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பிடக் கொடுக்கும் வசதிகள் கிடையாது. பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வசதியில்லை. அவ்வாறான நிலையில் இன்னொரு திருமணத்தினை செய்து கொள்கின்றனர். பிரச்சினைகள் என்று வரும் சந்தர்ப்பத்தில் காதியாரிடம் வழக்குக்கு போனவுடன் இரண்டு குடும்பத்தினைப் பார்க்க முடியாது. அதனால் விவாகரத்து செய்கின்றேன் என்பார்கள். இதனால் பாதிக்கப்படுவது யார்?
அடுத்ததாக மஹ்ர் என்ற விடயம். கொடை திருமணத்திற்கான நிபந்தனையாக சொல்லப்படுகின்றது. ஆணுக்கு சீதனம் கொடுக்கின்ற மாதிரி திருமணக் கொடையாக பெண்ணுக்கு வழங்கப்படுகின்ற ஒரு அன்பளிப்பு. அந்த அன்பளிப்பு தொகையை பெயருக்குத் தான் எழுதி வைப்பார்கள். 101 ரூபா, 1001 ரூபா என்று கொடுப்பார்கள். மற்ற பக்கம் சீதனம் நிறைய வாங்கிக் கொள்வார்கள். மஹ்ர் கொடுக்கப்படா விட்டால் மணப் பெண்ணை தொட முடியாது. அதற்கான திருமணக் கொடை கொடுக்கப்பட வேண்டும் என்று தான் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்தக் கொடை எவ்வளவு என்று தீர்மானிப்பது மணப் பெண் தான். ஆனால் எங்கள் சமூகத்தில் பார்த்தோமானால், இது பற்றி பெண்களிடம் கேட்பதே
இல்லை. மணமகன் 101 ரூபா என்று இட்டு கையொப்பம் இட்டதும் அவ்வளவு தான். இங்கு இஸ்லாம் சொல்லுகின்ற விடயங்கள் எதுவுமே இந்த சட்டத்தில் இல்லை. மஹ்ர் கொடையினை கணவனும், மணமகளின் தந்தையும் தான் இதனை முடிவு செய்கின்றனர்.
திருமணப் பதிவு என்று பார்த்தால் திருமண சான்றிதழில் மணமகனும், மணமகளும் கையொப்பமிடுவது தான் வழமை. ஆனால், முஸ்லிம் விவாகங்களில் மணமகளுக்கு பதிலாக மணமகளின் தந்தை கையொப்பம் இடுவார். அல்லது மூத்த சகோதரர் வைப்பார். பெண்ணுக்கு திருமணம் முடிந்ததாக இல்லையா என்று தெரியாது. ஏனெனில் அவள் வீட்டில் இருப்பார். இவ்வாறான சம்பவங்கள் பல எங்களுக்கு தெரிய வந்தன. பல பிள்ளைகள் எங்களிடம் அழுது அழுது இந்தக் கதையை சொல்லியிருக்கின்றார்கள். தகப்பனாரின் வற்புறுத்தலின் பேரில் பல சம்பவங்கள் இவ்வாறு நடந்துள்ளன. இது இஸ்லாம் அல்ல. ஒரு மணமகளின் சம்மதம் கேளாமல் திருமணம் முடிப்பது சட்டரீதியானதல்ல என்று தான் இஸ்லாம் கூறுகின்றது.
இஸ்லாத்தில் பெண் தனியே வியாபாரம் நடத்தும் உரிமையினை கொண்டிருக்கின்றாள். சொத்து வைத்திருப்பதற்கான உரிமை உண்டு. தனியே ஒப்பந்தங்கள் செய்வதற்கு உரிமை இருக்கின்றது. ஏன் தன் திருமணத்தினை தீர்மானிக்கின்ற உரிமை அவளுக்கு இல்லையா?
இது இஸ்லாத்தில் உள்ள பிரச்சினை அல்ல. எமது சமூக அமைப்பில் உள்ள பிரச்சினையாகும். இஸ்லாத்தின் பேரால் நடக்கின்ற விடயங்கள். இஸ்லாத்தினை புரிந்து கொண்டுள்ள விதங்களில் உள்ள பிரச்சினைகள்.

கேள்வி: முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தின் படி பெண்களினால் காதிகளாகவும், காதிகள் சபை உறுப்பினர்களாகவும், ஜுரிகளாகவும், விவாகப் பதிவாளர்களாகவும் வர முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், காதிகளாக பெண்கள் நியமிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி குறிப்பிட முடியுமா?

பதில்: பெண்கள் காதிகளாக வரலாமா இல்லையா என்ற சர்ச்சை தொடர்ந்து நிலவுகின்றது. காதி நீதிமன்றத்தில் பெண் தேவையா இல்லையா என்பது ஒரு பிரச்சினையாக இருப்பதனை விட, ஒரு பெண் கட்டாயம் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஒரு தேவைப்பாடு இருக்கின்றது. உதாரணமாக ஒரு பெண் தனது கணவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் அதாவது கணவனின் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்கின்றாள் என்று வைத்துக் கொள்வோம். காதி நீதிமன்றத்தில் வழக்குப் போட்டால் அங்கு காதி ஆணாக இருக்கின்றார். வழக்குத் கேட்கின்ற 3 ஜுரிகள் ஆண்களாகத் தான் கட்டாயம் இருக்க வேண்டும். இரண்டு ஆண் சாட்சி தேவை. அதாவது கணவன், காதியார், மூன்று ஜுரிகள் கட்டாயம் இருக்க வேண்டும். மொத்தம் ஐந்து ஆண்கள். இந்த ஐந்து ஆண்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண் சென்று அறைக்குள் நிகழ்ந்த கணவனின் பாலியல் கொடுமைகளை விபரிப்பாளா? முஸ்லிம் பெண்களை விருந்தினர்களுக்கு தேநீர் கொடுக்கக் கூட இதர ஆண்களுக்கு முன் வர அனுமதிக்காத இந்த சமூகத்தில் இது சாத்தியப்படுமா?

ஆர் .பிரியதர்ஷனி

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top