சிஸ்டம் சரியில்லை

சிஸ்டம் சரியில்லை

""தாமதமாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும்'' இந்த வார்த்தையை பல சந்தர்ப்பங்களில் பல சூழ்நிலைகளில் குறிப்பாக, நீதி கிடைக்க தாமதமாகும் போது, பலர் பயன்படுத்துவதை பார்த்திருக்கின்றோம். ஆனால், அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் இந்த வார்த்தையை பயன்படுத்தியமை அவதானிக்க வேண்டிய விடயமாகும்.

திருகோணமலையில் படு கொலைசெய்யப்பட்ட 5 மாணவர்களுக்கு நீதிகோரி மீண்டும் ஒரு தடவை சர்வதேச அளவில் கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அதுல் கேசாப்பின் இந்த டுவிட்டர் பதிவு முக்கியத்துவமிக்கதாகவும், இவர்களுக்கு நீதி
கிடைப்பதை துரிதப்படுத்தும் ஒரு தூண்டுகோலாக நாம் பார்க்க முடியும்.

2006 ஜனவரி 2 ஆம் திகதி இலங்கையின் திருகோணமலை கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சுமார் 3 தசாப்த காலங்களாக போரால் துன்பங்களை மட்டுமே அனுபவித்து வந்த தமிழ் மக்களுக்கு, அன்றைய தினம் "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல' தான் அமைந்திருந்தது.

கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப்பரீட்சை எழுதிவிட்டு, எதிர்காலத்தை நோக்கி காத்திருந்த மாணவர்கள் எதிர்பாராத தருணத்தில் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதை யாரால் ஜீரணிக்க முடியும்?

20 வயதை எட்டிப்பிடித்த மனோகரன் ராகிர் (22.09.1985); (2) யோகராஜா ஹெமாச்சந்திரா (04.03.1985); (3) லோகிதராஜா ரோஹன் (07.04.1985); (4) தங்கத்துரை சிவானந்தா (06.04.1985) மற்றும் (5) சண்முகராஜா கஜேந்திரன் (16.09.1985) ஆகிய 5 மாணவர்களே துப்பாக்கிச் சன்னங்களுக்கு தங்கள் உடலை பலிகொடுத்தவர்கள்.

குறித்த மாணவர்கள் படுகொலை தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்த இவர்களின் படுகொலையை அப்போதைய அரசாங்கமும் இலங்கை பாதுகாப்புத் தரப்பினரும் ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்றும், பாதுகாப்புப் படைகள் மீது கிரனைட் தாக்குதல் நடத்த முற்பட்ட போது, கிரனைட் வெடித்து இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியதாக அப்போது செய்தி வெளியாகியிருந்தது.

எனினும், மரண விசாரணையின் போது, அவர்களது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்தப் படுகொலைகள் குறித்து விசாரணையை மேற்கொள்ளவும், சந்தேக நபர்களை சட்டத்தின் முன் ஆஜர்படுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிறப்பு அதிரடிப் படையினர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013 ஜுலை மாதம் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், இவர்கள் அனைவரும் 2013 ஓக்டோபர் 14 ஆம் திகதி திருகோணமலை நீதிவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணையின் அறிக்கையைத் தயாரிக்குமாறு குற்றவியல் புலனாய்வுப் பிரிவிடம் கோரப்பட்ட நிலையில், அவர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டதுடன், தாமதத்திற்கு நியாயமான காரணங்களை வழங்கவில்லை என்பதால், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல சாட்சிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன், இந்த வழக்கின் முன்னேற்றம் ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில், திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சிகள் நாட்டில் இல்லை என்றும், வெளிநாடுகளில் இருப்பதால் விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்களுக்கு நீதி கிடைப்பது தாமதமாவது குறித்து அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப்பின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியிருந்தார்.

2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று, 12 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
இந்நிலையில்தான், ஐந்து மாணவர்கள் தொடர்பில் நீதி வேண்டும் என்று, சர்வதேச மன்னிப்பு சபை, டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு, இந்த வழக்கை மீள உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் நாட்டில் இல்லாததால் வழக்கு தொடரமுடியவில்லை என்று, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளதுடன், அவர்கள் வெளிநாடுகளில் உள்ளதால், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும் நிலை இல்லையென்றும் கூறியுள்ளார்.

தற்போது, ஸ்கைப் ஊடாக சாட்சியமளிக்கும் முறை வளர்ச்சியடைந்து வருவதால், இந்த வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

"டிரிங்கோ5' என அழைக்கப்படும் இந்த வழக்கு, 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர்களின் வழக்கானது, இலங்கைத் தீவில் நீதிக்கான நீண்ட, கடினமான போராட்டத்திற்கும் அடையாளமாக மாறியுள்ளது.

2014 ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதி செயலாளருடனான சந்திப்பின் போது, சட்டமா அதிபர் திணைக்களம் 14 சாட்சிகளிடம் இருந்து ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், ஏழு விடயங்களைச் சோதனையிட்டதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.

நாட்டிற்கு வெளியே உள்ளவர்களைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருந்தபோதிலும், சட்டமா அதிபர் திணைக்களம் மேலும், 14 சாட்சிகளை அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு, விசாரணையை குழுக்கள் அமைத்து மறுபரிசீலனை செய்யப்பட்டாலும், இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகவே உள்ளது.

எவ்வாறாயினும், இந்தனை வருடங்கள் கடந்தும் இன்று வரை, இந்தக் கொலைகளுக்கு எந்த ஒருவரும் பொறுப்பு இல்லை என்பது சட்டத்தில் உள்ள வலுவற்ற தன்மையைக் காட்டுகின்றது. இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த வழக்குகள் ஆயிரத்தில் ஒன்றாக இருக்கலாம் ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது மாத்திரமே மிகப்பெரிய விடயமாக இருக்கும்.

குறிப்பிட்ட விடயம் நடைபெற்ற குறுகிய காலத்துக்குள் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுகப்படும் போது, அந்த மக்களுக்கு நீதி கிடைப்பது, பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதலாகவாவது இருந்திருக்கும். ஆனால், தசாப்த காலம் கடந்து இன்னும் நீதி கிடைக்காமல் அவர்கள் எத்துணை வேதனையில் இருப்பார்கள் என்பதை யோசித்து பார்த்ததால் தான் புரியும்.

இலங்கை இராணுவத்தினர் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டு, சர்வதேச நாடுகள் அதனை ஆயுதமாக்கி பயன்படுத்தும் நிலையில், பொதுமக்களை அதிகளவில் வேதனைக்கு உள்ளாக்கிய இவ்வாறான வழக்குகள் குறித்தாவது அதிக கவனம் செலுத்தி துரிதமாக விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் இனியாவது முன்வர வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதால் நல்லாட்சி அரசாங்கத்தை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு அராசாங்கம் விரைவில் தீர்வு வழங்க முன்வரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் அபிலாஷையாகும்.

இதேவேளை, கடந்த 2017 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதிக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 5,614 முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அதில் ஆகக்கூடிய முறைப்பாடுகள் தடுப்புக் காவலில் இருக்கும்போது முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலானவை என, ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீப்பிக்கா உடகம தெரிவித்துள்ளதை நாம் இங்கு நினைவுபடுத்தலாம்.

இவ்வாறான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,174 ஆகும் என்பதுடன், 249 முறைப்பாடுகள் சித்திரவதைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதும், அவை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டவை என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.

இதில், 171 முறைப்பாடுகள் துன்புறுத்தல்கள் வடக்கில் புலனாய்வு அதிகாரிகள் பொதுமக்களை துன்புறுத்தியமை, மற்றும் 323 முறைப்பாடுகள் பொலிஸாரால் விடப்பட்ட அச்சுறுத்தல்கள் என்பதும், 298 முறைப்பாடுகள் பலவந்தமாக கைது செய்து தடுத்து வைத்தல் தொடர்பானது என்று நினைக்கும் போது, நியாயமான விசாரரணைகள் குறித்த கேள்விகள் எழாமல் இல்லை.

இந்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் வெளிநாடுகளில் உள்ள சாட்சியாளர்களிடம் ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாலும், சாட்சி சொல்ல வந்து சட்டத்தின் மறுமுகத்தை சந்திக்க வேண்டி ஏற்படலாம் என்ற அச்சத்தில் சாட்சிகள் முன்வருவார்களா என்பதும் கேள்விக்குறியே.

2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும், இதுவரை இவ்வாறான வழக்குகள் நிறைவுக்கு வருவதில் காலதாமதம் இன்னும் நிலவுகின்றது. சம்பவம் நடைபெற்று, இத்தனை வருடங்களாக குற்றவாளிகள் நம் மத்தியில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டுள்ளனர் என்ற நினைப்பு மாணவர்களின் மரணங்களால் ஏற்பட்ட வலியைவிட, பலமடங்கு வேதனையை தரும் விடயமாகும்.

சட்டத்துக்கு சாட்சிகள் மாத்திரமே தேவை எனும்போது, பாதிக்கப்பட்டவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவ்வாறான விடயங்களை பார்க்கும்போது ரஜினிகாந்த் சொன்னதுபோல "சிஸ்டம் சரியில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.'

ஜே.ஏ.ஜோர்ஜ்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top