போலி கணக்குகளை கண்டு பிடிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்

போலி கணக்குகளை கண்டு பிடிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்

பேஸ்புக்கின் ஆரம்பக்காலத்தில் இருந்தே அந்த நிறுவனத்துக்கும் சரி, பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் சரி மிகப்பெரிய தொல்லையாக இருப்பது பேக் ஐடிகள்தான் (போலி கணக்கு). பேஸ்புக் என்றால் என்னவென்று அறியாதவர்கள் புதிதாக கணக்கைத் தொடங்கி பயன்படுத்த ஆரம்பிக்கும்போது பெரும்பாலும் பேக் ஐடிகளின்(போலி கணக்கு) வலையில் சிக்கிவிடுவார்கள். ஒரே ஒரு மெயில் ஐடியோ அல்லது தொலைபேசி எண்ணோ இருந்தால் போதும் நிமிடத்தில் ஒரு பேஸ்புக் கணக்கை உருவாக்கி விட முடியும். இதன் எளிமை காரணமாக ஒருவர் பல கணக்குகளை உருவாக்கிவிட முடியும் என்பதுதான் நிலைமை.

nec.jpg

அப்படி உருவாக்குபவர்கள் தங்களது உண்மையான  தகவல்களைக் கொடுத்தால் யாருக்கும் பிரச்னை இல்லை. அப்படி இல்லாமல் பொய்யான தகவல்களைக் கொடுத்து, வேறொருவரின் புகைப்படங்களை அவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தும் பொழுதுதான் அங்கே பிரச்னை உண்டாகிறது. தேவையற்ற மெசேஜ்களை(குருஞ்செய்தி) அனுப்புவது, தனிநபர் தாக்குதல்கள், மிரட்டல்கள் என இதன் மூலமாக பெரும்பாலும் பிரச்னைகள்தான் உருவாகி வருகின்றன.

மார்க் ஸுக்கர்பெர்க்

mark-zuckerberg-facebook-protest-jdlasica.jpg

ஏற்கெனவே இருக்கும் பேக் ஐடிகளைக் களையவும், புதிதாக போலி கணக்குகள் உருவாவதைத் தவிர்க்கவும் பேஸ்புக் தொடக்கம் முதலே பல முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த மாதம் கூட பேஸ்புக் கணக்கைத் தொடங்க ஆதார் எண் அவசியம் என்ற தகவல் வைரலாகப் பரவிய நிலையில் அதை மறுத்தது பேஸ்புக் நிறுவனம். முடிந்தவரையில் தன்னாலான எல்லா முயற்சிகளையும் பயன்படுத்தி பார்த்துவிட்ட பேஸ்புக் நிர்வாகம் தற்பொழுது களமிறக்கியிருக்கும் புதிய ஆயுதம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். கடந்த சில நாள்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

எப்படி செயல்படும் இந்த தொழில்நுட்பம்?

224708_159928390736155_961527_n_20066.jpg

ஒரு புகைப்படத்தை பதிவு செய்யும்போது படத்தில் இருக்கும் நபர்களை டேக் செய்வதற்காக அடையாளம் காட்டுவது பேஸ்புக்கில் ஏற்கெனவே இருக்கும் வசதிகளில் ஒன்றுதான்.

அதிலிருந்து இந்த முகத்தை ஆராயும் அமைப்பு சற்று மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பேஸ்புக்கில் ஒரு புகைப்படம் பதிவு செய்யும்போது படத்தில் இருக்கும் முகங்களின் நுணுக்கமான தகவல்களை சேகரிக்கிறது இந்தத் தொழில்நுட்பம். அதேபோல படங்களை வேறொருவர் பயன்படுத்தும் பொழுது ஏற்கெனவே இருக்கும் தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த குறிப்பிட்ட புகைப்படத்தை அடையாளம் காண முடியும்.

இதுபோல புகைப்படங்கள் ஒன்று இரண்டு இருந்தால் பரவாயில்லை, அதைக் கணினியின் உதவியுடன் மனிதர்களே கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் பேஸ்புக்கில் இருக்கும் கோடிக்கணக்கான புகைப்படங்களை எப்படி ஆரய்வது என்றபோதுதான் கை கொடுக்கிறது செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட facial recognition தொழில்நுட்பம்.

human-2944064_960_720_20353.jpg

இந்த வசதியை பயன்படுத்தும்பொழுது ஒரு புகைப்படத்தில் தென்படும் அனைத்து முகங்களின் தரவுகளைச் சேகரிக்கும் இந்தத் தொழில்நுட்பம் அடுத்த வேலையாக அதனிடம் இருக்கும் பிற தரவுகளோடு ஆராய்ந்து பார்க்கும். அப்படி யாராவது ஒருவரின் புகைப்படம் வேறொரு இடத்தில் தென்பட்டால் அவருக்கு அதைப் பற்றிய தகவலை அனுப்பி வைக்கும். அந்த புகைப்படம் அவரின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் புகாரளித்தால் அது நீக்கப்படும்.

பெரும்பாலான போலிக் கணக்குகள் இதுபோன்ற புகைப்படங்களையே அதிகமாக பயன்படுத்துவதால் அவற்றை எளிதாக இந்தத் தொழில்நுட்பம் மூலமாக கண்டறிந்து நீக்க முடியும். எனவே, இனிமேல் போலி கணக்குகளைத் தடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது பேஸ்புக். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் தானாகவே டேக் செய்யும்பொழுது புகைப்படத்துக்கு சம்பந்தமில்லாதவர்களும் கண்காணிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.

அதேபோல ஒரு நடிகர் அல்லது நடிகை புகைப்படத்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் சிக்கல் எழவும் வாய்ப்புண்டு. ஆனால், இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்க பேஸ்புக் வேறு எதாவது திட்டம் வைத்திருக்கலாம். பேஸ்புக்கில் இருக்கும் 2.1 பில்லியன் கணக்குகளில் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை மட்டும் 270 மில்லியனுக்கும் அதிகம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.   

மூலம் : விகடன்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top