செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம்; ஆய்வுகளை கோருகிறது நாசா

செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம்; ஆய்வுகளை கோருகிறது நாசா

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு பல்வேறு ஆய்வுகளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கேட்டுள்ளது.

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரகமாக நடத்தியது. தற்போது பூமியிலிருந்து வெகு தூரத்தில் அமைந்துள்ள செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா ஆய்வு செய்து வருகிறது.

பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை கொண்டு செல்லும் விண்கலமானது அங்கு சென்றடைய 3 ஆண்டுகள் காலம்பிடிக்கும்.

அவ்வளவு நாட்கள் விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதற்கேற்றவாறு விண்கலத்தைத் தயார் செய்தல், விண்வெளி வீரர்களை தயார்படுத்துதல், விண்கலத்திற்கு எரிபொருளை நிரப்புதல் போன்ற தீவிர ஆராய்ச்சிகளில் நாசா ஈடுபட்டுள்ளது.

இதற்காக பல்வேறு ஆய்வு நிறுவனங்களிடம் ஆய்வுத் திட்டங்களை நாசா கேட்டுள்ளது. 400 நாட்களுக்கு மேல் விண்வெளியில் மனிதர்கள் இருக்கும்படி திட்டங்களை உருவாக்குமாறு நாசா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நாசா தெரிவிக்கையில் “செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்காக பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை நாசா மேற்கொள்ளவுள்ளது. நீண்ட நாட்கள் விண்வெளியில் இருக்கும் வகையில் விண்வெளி வீரர்களை தயார்படுத்துதல், அவர்களைக் கண்காணித்தல் என பல பணிகளை நாம் மேற்கொள்ளவேண்டும். இதற்காக பல்வேறு திட்ட ஆராய்ச்சிகளை நாங்கள் கேட்டுள்ளோம். விண்வெளியில் வீரர்கள் நீண்ட நாட்கள் தங்கியிருக்கும்போது அவர்களது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் நமக்குத் தேவை.

ஓராண்டு வரை விண்வெளி வீரர்கள் ஸ்காட் கெல்லி, மிகாயில் கோர்னின்கோ ஆகியோர் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பல்வேறு விதமான தகவல்கள், புள்ளி விவரங்களைச் சேகரித்துள்ளோம். பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து கிடைத்த தகவல்கள், பூமியின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளையும் நாங்கள் கருத்தில் கொள்ளவுள்ளோம். குறுகிய நாட்கள் விண்வெளிக்குச் செல்லும்போது கிடைக்கும் விபரங்கள் மட்டுமே நம்மிடமுள்ளது.

இது நீண்ட நாட்கள் விண்வெளிக்குச் சென்று திரும்பும் திட்டமாகும். எனவே இதற்காக பல்வேறு வித பாதுகாப்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இதற்காக பாதுகாப்பான திட்டங்களை பல ஆய்வு நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம். இந்தத் திட்டங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் திகதிக்குள் கிடைக்கும் என நாசா எதிர்பார்க்கிறது. இதில் 15 முதல் 18 திட்டங்களை வரை நாசா தெரிவு செய்யும் என எதிர்பார்க்கிறோம். இந்தத் திட்டங்கள் குறித்து அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஆய்வு நடைபெறும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top