தமிழ்க் கூட்டமைப்பு மீது மஹிந்த சாட்டையடி!

தமிழ்க் கூட்டமைப்பு மீது மஹிந்த சாட்டையடி!

"தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம். தீர்வுப்பொதியை முன்வைப்பதற்காக எம்மால் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைத்திருந்தால் சிறந்த தீர்வுத் திட்டத்தை வழங்கியிருப்போம்.'' என முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

அரசமைப்பு நிர்ணய சபையில் நேற்று நடைபெற்ற புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

"நாட்டில் ஜனநாயகம் இல்லை. அது வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது. மதங்களுக்கிடையேயும் குரோதங்கள் ஏற்பட்டுள்ளன. வாழ்க்கைச்சுமையும் வதைக்கின்றது. இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலையிலேயே புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி இடம்பெற்று வருகின்றது.

எனினும், இந்தச் செயற்பாட்டுக்கு நாம் முழு ஆதரவையும் வழங்கியிருந்தோம். வழிநடத்தல் குழு மற்றும் ஏனைய உபகுழுக்களின் கூட்டங்களில் பங்கேற்றிருந்தோம். அத்துடன், சிபாரிசுகளையும் முன்வைத்தோம். அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே, புதிய அரசமைப்புக்கான செயற்பாடு எந்தத் திசையை நோக்கிச் செல்கின்றது என்பது தெரியாதுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார். அதைச் செய்வதற்காகவே அவருக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது. புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை.

ஜே.ஆர். ஜயவர்தனகூட புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் எனக் கூறிவிட்டு அதை மையப்படுத்தியே வாக்குக் கேட்டார்.

அரசமைப்பு நிர்ணய சபையில் இடம்பெறும் இவ்விவாதத்தில் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பேசுகின்றனர். பின்னர் எதிர்க்கட்சி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் பேசுகின்றன. உண்மையான எதிர்க்கட்சியான எமது கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது.

2015ஆம் ஆண்டு புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் என்று நான் கூறியிருந்தேன். நாட்டை ஒன்றிணைத்து மதவாத, அடிப்படைவாத பின்புலங்கள் இல்லாத அரசமைப்பொன்றைக் கொண்டுவருவேன் என்றுதான் உறுதியளித்திருந்தேன்.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகளின் பிரகாரம் மத்திய அரசுக்கான அதிகாரங்கள் இல்லாதுபோகின்றன. மத்திய, மாகாணங்களுக்கான இணைப்பும் ஒழிக்கப்படவுள்ளது. இது பாரதூரமான அச்சுறுத்தலாக மாறக்கூடிய விடயம். மத்திய அரசிடம் அதிகாரம் இல்லாதுபோகும்போது முஸ்லிம் மக்களும், மலையக மக்களும் பாதிக்கப்படுவர். மலையகத் தலைவர்கள் தனிநாடு கோரிக்கையை முன்வைக்கும் நிலைமை உருவாகக்கூடும்.

யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து ஜனநாயகத்தை நிலைநாட்டினோம். வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றினோம். காணி விடுவிப்புடன், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து 12 ஆயிரம் பேர்வரை விடுதலைசெய்தோம். அத்துடன், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து பேசினோம்.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொண்டிருந்தோம். பேச்சுகளை முன்னெடுப்பதற்காக நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவொன்றையும் அமைத்திருந்தோம்.

13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று நாட்டை ஒருமைப்படுத்துவதற்கான செனட் சபையொன்றையும் அமைக்கத் தீர்மானித்தோம். அது இப்போது முன்மொழிப்பட்டுள்ள செனட் சபையையும் தாண்டிய முன்னேற்றகரமானதாக இருந்தது.

நாங்கள் இனவாதிகள் அல்ல. இந்த நாட்டில் அரசமைப்புகளும், மறுசீரமைப்புகளும் உருவாக்கப்படும்போது அதில் இணக்கப்பாட்டுடன் பணியாற்றியுள்ளோம். ஜே.ஆர்.போன்று சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவளித்திருந்தோம். ஆனால், அன்றுமுதல் ஐக்கிய தேசியக் கட்சிதான் எதிர்த்து வந்துள்ளது. சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை நாடாளுமன்றில் தீயிட்டுக் கொளுத்தியிருந்தார்கள்.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண இரண்டு, மூன்று தடவைகள் நாங்கள் சம்பந்தனுடன் பேசியிருந்தோம் ஆனால், சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அன்றே எங்களுடன் இணைந்து தீர்வுகாண முற்பட்டிருந்தால் சிறந்த தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க முஸ்லிம் மக்கள் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராகவே உருவாக்கப்பட்டது. யுத்தத்தின்போது முஸ்லிம்களுக்கு நடந்ததை இன்னமும் அவர்கள் மறக்கவில்லை'' என்றார்.

Latest News

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top