தமிழக அரசின் செயற்பாடுகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை – கமல்

தமிழக அரசின் செயற்பாடுகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை – கமல்

தமிழகத்தில் அரசியல்வாதிகளின் போக்கு மக்கள் நலனில் அக்கறையற்றதாக இருக்கிறது எனவும், மாவட்டந்தோறும் ஒரு கிராமத்தை தான் தத்தெடுக்க இருப்பதாகவும் நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய  கமல் ஹாசன், பெருமைப்படத்தக்க சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் தமிழகத்தில் தற்போது எதுவும் சீராக இல்லை எனவும், இன்னும் காலம் கடக்கக்கூடாது என்ற தொலைநோக்கோடு தான் அரசியல் பயணம் புறப்படவிருப்பதாகவும் அவ கூறியுள்ளார்

தனது உண்மையான நோக்கம் தமிழகத்தின் சாதாரண நிலையை மாற்றிக் காட்டுவதே எனக் கூறிய கமல், தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் சீரற்ற கொள்கைகளை திருத்துவதே முக்கியம் என்றும், மக்கள் நலனில் அக்கறையற்றவர்களாக அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் மொத்த வருமான நிலை பற்றாக்குறையாக உள்ளது என்று தனது உரையில் சுட்டிக்காட்டிய கமல், 2016 - 17 ஆம் ஆண்டில் அகில இந்தியளவில் தமிழகம் நிதிநிலைப் பற்றாக்குறையில் மூன்றாம் இடத்தை வகித்தது என்றும், இதற்கு அரசின் வீண் செலவுகள், திட்டமிடாத நிதிச்சுமைகள், மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்தாத அலட்சியப்போக்கு ஆகியவை காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு பொறுப்பற்ற தன்மையுடன் செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய கமல், பல்லாண்டுகளாக நீர்நிலைகளை சீரமைக்காமல் ஒதுக்கியதால் தமிழக மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், கல்வி, வேலைவாய்ப்பு, மக்கள்நலன் காத்தல் உள்ளிட்ட அம்சங்களில் தமிழக அரசு தனது கடமையைச் சரியாக செய்ததா என்பது கேள்விக்குறியே என்றும் கூறியுள்ளார்.

கிராமங்கள் புதுவடிவமெடுத்தால் அது நாட்டையே மாற்றும் என்ற காந்தியடிகளின் வரியை சுட்டிக்காட்டிய கமல், பெப்ரவரி  21ஆம் திகதி  முதல் 'நாளை நமதே' என்ற தனது அரசியல் பயணத்தை தொடங்கவிருப்பதாகவும், முன்னோடித் திட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுக்கப்போவதாகவும் அறிவித்தார்.

தமிழகத்தில் முன்மாதிரி கிராமங்களை உருவாக்குவது இந்தியாவிற்கே வழிகாட்டுவதாக அமைய வாய்ப்புள்ளதாகவும், உலகத்தமிழர்கள் தங்கள் ஆதரவை, வழிகாட்டுதல்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top